×

கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி: சிபிசிஐடி விசாரணை விரைவில் துவக்கம்..!

மரக்காணம்: மரக்காணம், செய்யூரில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை துவக்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பலர் விஷச் சாராயம் அருந்தியுள்ளனர். இதில் இதுவரை 14 பேர் பரிதாபமாக இறந்தனர். இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே விஷச்சாராயம் அருந்திய 5 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். குறைந்த விலை என்பதால் இவர்கள் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்தது தெரியவந்தது. இரு சம்பவத்திலும் சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக ₹10 லட்சம் வழங்க உத்தரவிட்டார். நேற்று பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம், உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்கள் பழனி, பாண்டியனை தற்காலிக பணி நீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதல்வர் உத்தரவிட்டார்.

முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட பொறுப்பு கள்ளக்குறிச்சி எஸ்.பி மோகன்ராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு காஞ்சிபுரம் எஸ்.பி டாக்டர் சுதாகர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்படி இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் விழுப்புரம் வந்து கள்ளச்சாராய வழக்கு சம்பந்தமாக வழக்கு விபரங்களை பெற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது. இதன் பின்னர் சம்பவம் நடந்த எக்கியர்குப்பம், மற்றும் ெசய்யூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்றது சம்பந்தமாக கள்ளச்சாராய மொத்த வியாபாரி மரக்காணம் அமரன்(24) மற்றும் அவரது கூட்டாளிகள் மரக்காணத்தை சேர்ந்த முத்து(31), ஆறுமுகம்(42), ரவி(50), மண்ணாங்கட்டி(50) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி தனிப்படை போலீசார் புதுவையை சேர்ந்த சாராய மொத்த வியாபாரிகள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடமும் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

The post கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி: சிபிசிஐடி விசாரணை விரைவில் துவக்கம்..! appeared first on Dinakaran.

Tags : CPCID ,Marakkanam ,CPCIT ,Marakkanam, Duur ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே தற்கொலை...